25 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கோவையில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 25 ஆண்டாக தலைமறைவாக இருப்பவர் மற்றும் சிறை வார்டனை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருப்பவரையும் தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்து உள்ளது.

Update: 2022-11-28 18:45 GMT


கோவையில் வெடிகுண்டு வைத்த வழக்கில் 25 ஆண்டாக தலைமறைவாக இருப்பவர் மற்றும் சிறை வார்டனை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருப்பவரையும் தேடப்படும் குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்து உள்ளது.

வெடிகுண்டு வைப்பு

கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே கிளாசிக் டவர் உள்ளது. இங்குள்ள கார் நிறுத்தம் பகுதியில் கடந்த 1997-ம் ஆண்டு வெடிகுண்டு வைக்கப்பட்டது. அதை அங்கு பணியாற்றிய காவலாளி கண்டுபிடித்து அதை எடுத்த குப்பை கிடங்கில் வீசினார். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள ராஜா என்கிற ஷாஜகான் மற்றும் கோவை போத்தனூரை சேர்ந்த முஜிபுர் ரகுமான் ஆகியோர் தலைமறைவானார்கள். அதில் கடந்த 2014-ம் ஆண்டில் ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைகாக உள்ள முஜிபுர் ரகுமானை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேடப்படும் குற்றவாளி

இந்த நிலையில் அவர் பல ஆண்டாக தலைமறைவாக இருப்பதால், அவரை பிடித்து அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அவரை தேடப்படும் குற்றவாளி என்றும் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அறிவித்து உள்ளது.

எனவே அவரை பிடிப்பது தொடர்பாக இது தொடர்பாக முஜிபுர் ரகுமான் வீடு மற்றும் அதிகமாக கூடும் இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. அத்துடன் தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

குண்டுவீசி வார்டன் கொலை

அதுபோன்று கோவை மத்திய சிறையில் முஸ்லிம் கைதிகளை கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த ராஜா என்கிற டெய்லர் ராஜா உள்பட 4 பேர் பார்க்க சென்றனர். அப்போது அவர்களுக்கு சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்துடன் முஸ்லிம் கைதிகளை வார்டன்கள் மோசமாக நடத்தியதாக தெரிகிறது.

இதனால் மத்திய சிறையில் பணியாற்றிய சில வார்டன்களுக்கும், இந்த 4 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி டெய்லர் ராஜா உள்பட 4 பேர் மத்திய சிறை அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள், அங்கு பணியில் இருந்த வார்டன் பூபாலன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதுடன், ஆயுதங்களை கொண்டு அவரை தாக்கினார்கள்.

தேடுபவராக அறிவிப்பு

இதில் படுகாயம் அடைந்தவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். ஆனால் டெய்லர் ராஜா மட்டும் தலைமறைவானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் டெய்லர் ராஜாவை பிடித்து அடுத்த மாதம் 23-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அறிவித்து உள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்