25 உழவர் சந்தைகளில் பாரம்பரிய உணவகங்கள் -தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் பாரம்பரிய உணவகங்களை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-10 23:56 GMT

சென்னை,

கடந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், உழவர் சந்தைக்கு விளை பொருட்களுடன் அதிகாலையிலேயே விவசாயிகள் வந்துவிடுகின்றனர். மதியம் வரை அவற்றை விற்பனை செய்து களைத்துவிடுகின்றனர்.

தொன்மை சார் உணவகம்

எனவே அவர்களின் தாகத்தை தீர்ப்பதோடு, வயிற்றை நிரப்பிக்கொள்ளும் வகையில் தமிழகத்தின் தொன்மை மிக்க ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியக் கூழ் வகைகள் போன்ற உணவுகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் ஆகியவற்றை வழங்கவும், அங்கு வருவோரும் அவற்றை அருந்தி விழிப்புணர்வு பெறவும் முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் பாரம்பரிய தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதுகுறித்து அரசுக்கு வேளாண் வணிகத்துறை இயக்குநர் கடிதம் எழுதினார். அதில், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் 183 உழவர் சந்தைகளில் 28 சந்தைகளில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

25 உழவர் சந்தைகள்

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதற்கு ஏற்ப, 25 உழவர் சந்தைகளில் ஏற்கனவே செயல்படும் உணவகங்களை தொன்மை சார் உணவகங்களாக மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

அதன்படி, கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி; திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஈரோடு சம்பத்நகர்; கன்னியாகுமரி வடசேரி; கிருஷ்ணகிரி ஓசூர்; மதுரை அண்ணாநகர், சொக்கிகுளம்; நீலகிரி உதகமண்டலம்;

ராமநாதபுரம் பரமக்குடி; சேலம் சூரமங்கலம்; நெல்லை பாளையங்கோட்டை, மேலப்பாளையம்; திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, உடுமலைபேட்டை; பெரம்பலூர்; புதுக்கோட்டை; கள்ளக்குறிச்சி; வேலூர், காட்பாடி; தேனி; திருச்சி மாவட்டம் கே.கே.நகர் ஆகிய 25 உழவர் சந்தைகளில் ஏற்கனவே செயல்படும் உணவகங்களை தொன்மை சார் உணவகங்களாக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கான அனுமதியை வழங்கி அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்