வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் வருகை; மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் பேர் வருகை தந்தனர். மாமல்லபுரத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
25 ஆயிரம் பேர்
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு கடந்த 8 நாட்களில் வண்டலூர் பூங்காவுக்கு ஒரு லட்சம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து சென்றனர்.
நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்ததால் பூங்கா நுழைவாயில் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் போன்றவற்றை குடும்பத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
டிக்கெட் கவுண்ட்டர்கள் குறைப்பு
பூங்காவில் உள்ள 20 டிக்கெட் கவுண்ட்டர்களில் 10 டிக்கெட் கவுண்ட்டர்கள் மட்டுமே திறந்து இருந்தது. இதனால் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வந்த பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட்டுகளை பெற முயன்றனர். பூங்கா ஊழியர்களும் பூங்காவுக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்க முடியாமல் திணறினார்கள்.
இதனால் அவ்வப்போது நுழைவு டிக்கெட் வழங்கும் இடத்தில் சலசலப்புகளும், பரபரப்பும் ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் குடும்பத்துடன் பூங்காவை சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
பெண் மயங்கினார்
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி படப்பையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாநகர போக்குவரத்து மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பூங்காவில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆன்லைன் மூலம் டிக்கெட்
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
எதிர்பார்த்ததைவிட நேற்று கூட்டம் அலைமோதியது. பூங்காவுக்கு ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே உள்ள காரணத்தால், 10 கவுண்ட்டர்கள் மட்டுமே டிக்கெட் வாங்குவதற்காக திறந்து வைத்திருந்தோம்.
ஆனால் ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி பற்றி பலருக்கு தெரியாததால் பூங்காவில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகரித்தது. எனவே இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாக வண்டலூர் பூங்காவுக்கு டிக்கெட் வழங்கப்படுவது பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரத்தில் குவிந்தனர்
அதேபோல் புத்தாண்டு விடுமுறையையொட்டி மாமல்லபுரத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அர்ச்சுனன் தபசு, கணேசரதம், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள சிற்பங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நேற்று காலையில் பனி மூட்டத்தால் குளிர் நிலவிய சூழலில், பகலில் வெயில் அதிகமாக வாட்டி வதைத்ததால் பலர் புராதன சின்ன வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.
அர்ச்சுனன் தபசு சிற்ப வளாகத்தில் உள்ள உயரமான பாறைக்குன்று மீது ஏறிய வாலிபர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தனர். அவர்களை தொல்லியல் துறை பாதுகாவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.
நேற்று சுற்றுலா பயணிகள் அதிகமானோர் மாமல்லபுரத்தில் திரண்டதால் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவை ஒன்றன்பின், ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் பஸ் நிலையம் தற்காலிகமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்லவன் சிலை அருகே மாற்றப்பட்டது. மாலை 5 மணி முதல் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் பஸ்கள் வராததால் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மாமல்லபுரம் போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் ஒவ்வொரு பஸ்சாக வந்தது. அதில் ஏறி பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.