அஞ்சலக அடையாள அட்டை வழங்காததால் வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு

அஞ்சலக அடையாள அட்டை வழங்காததால் வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-10-12 18:38 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரை சேர்ந்தவர் முருகப்பாண்டியன். வக்கீலான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக அடையாள அட்டை வேண்டி, அதற்கான தொகை ரூ.250 செலுத்தி விண்ணப்பித்து இருந்தார். மாவட்ட தலைமை தபால் நிலைய அலுவலரிடம் முருகப்பாண்டியன் பலமுறை தனது அடையாள அட்டையை தாருங்கள் என்று கேட்டு பார்த்தும், அவர் பொறுப்பற்ற முறையில் பதில் கூறி காலம் தாழ்த்தி வந்தார். இதனால் மன உளைச்சலான முருகப்பாண்டியன் அப்போதைய ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர், பெரம்பலூர் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலர், பாடாலூர் அஞ்சல் அலுவலக தபால்காரர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, சேவை குறைபாடு காரணமாக ரூ.90 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம் பெற்று தர வேண்டும் என்று வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கு விசாரணையில் முறையான பதில் தாக்கல் செய்யப்படாததாலும், இதுவரை அஞ்சலக அடையாள அட்டை வழங்காததாலும், இரு தரப்பையும் விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் அஞ்சலக சேவை குறைபாட்டால் ஏற்பட்ட முருகப்பாண்டியனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு நஷ்ட ஈடாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரமும் எதிர் மனுதாரர்கள் கொடுத்திட வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்