செல்போன் பழுது நீக்கும் கடை உரிமையாளர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

செல்போன் பழுது நீக்கும் கடை உரிமையாளர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

Update: 2022-09-12 13:49 GMT

போடிப்பட்டி

உடுமலை அருகே செல்போன் பழுது நீக்கும் கடை உரிமையாளர் வீட்டில் 25 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செல்போன் பழுது நீக்கும் கடை உரிமையாளர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெரியகோட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 53). இவர் உடுமலை பஸ் நிலையத்துக்கு அருகில் செல்போன் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவருடைய மகள் உடுமலையில் உள்ள மகளிர் கல்லூரியில் முதுகலை 2 -ஆம் ஆண்டு படித்து வருகிறார். மகள் கல்லூரி சென்று வருவதற்கும், இவர் கடைக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதால் கணக்கம்பாளையம் கணேசபுரம் பகுதியில் கந்தவேல் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இந்தநிலையில் கந்தவேலின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனைவிக்குத் துணையாக பகல் நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருக்கும் கந்தவேல், இரவில் வீட்டுக்கு திரும்பி விடுவார்.ஆனால் நேற்று முன்தினம் கந்தவேல் தனது மகளுடன் ஆஸ்பத்திரியிலேயே தங்கி விட்டார்.

25 நகை திருட்டு

பின்னர் நேற்று காலை கந்தவேல் மட்டும் வீட்டிற்கு வந்தார்.. அங்கு வீட்டின் கேட்டை திறந்து ெகாண்டு உள்ளே சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கந்தவேல் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த 25 பவுன்நகையை காணவில்லை. அவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர்.

இது குறித்து உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் துறையினர் உதவியுடன் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் திருட்டு நடந்த வீடு இருக்கும் பகுதியில் கேமரா பொருத்தப்படவில்லை.

கந்தவேல் ஆஸ்பத்திரியில் இருப்பதை தெரிந்து கொண்ட ஆசாமிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தவேல் வீட்டிற்கு வந்து காம்பவுண்டு சுவரை தாண்டிக் குதித்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்துத் திறந்து உள்ளே இருந்த 25 பவுன் நகையை திருடி சென்று உள்ளனர். அதேநேரத்தில் ஒரு அட்டைப் பெட்டியிலிருந்த மடிக்கணினியை எடுத்து பார்த்து விட்டு அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

பீரோவை உடைப்பதற்கு வீட்டின் பக்கவாட்டுப் பகுதியிலிருந்த அரிவாளை எடுத்து வந்து பயன்படுத்தியுள்ளனர். மேலும் கொள்ளையர்கள் கொண்டு வந்த சிறிய கட்டர் ஒன்றையும் அங்கேயே விட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டதாக கந்தவேல் வேதனை தெரிவித்தார். மேலும் ஆஸ்பத்திரி கட்டணம் செலுத்துவதற்காக வீட்டிலிருந்த ரூ. 1 லட்சத்தை எடுத்துச் சென்று விட்டதால் அந்த தொகை தப்பியது என்றும் அவர் கூறினார். இதே வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உரிமையாளர் ராஜகோபால் குடியிருந்த போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற மர்ம நபர்கள் வீட்டிலிருந்தவர்கள் விழித்துக் கொண்டதால் தப்பி ஓடிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்