புகையிலை பொருட்கள், கஞ்சா விற்ற 25 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக விழுப்புரம் அருகே வெங்கந்தூரை சேர்ந்த விஜயகுமார்(வயது42), விக்கிரவாண்டி சீனிவாசன்(42), செஞ்சி சோகுப்பம் மூர்த்தி(40), விழுப்புரம் மந்தக்கரை கார்த்திக்(37), முகையூர் பாபு(47), விழுப்புரம் இந்திரா நகர் ராஜன்(51), கூட்டேரிப்பட்டு வெங்கடேசன்(43), செஞ்சி அப்பம்பட்டு ராமு(70), திண்டிவனம் அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த கிருபாநாதன்(40) உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 500 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கஞ்சா விற்பனை செய்த கிருஷ்ணகிரி மாவட்டம் வரத்தம்பட்டியை சேர்ந்த அசோக்குமார்(30), திண்டிவனம்-செஞ்சி சாலையை சேர்ந்த அப்பு(22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 18 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.