25 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 கோடி மோசடி

25 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 கோடி மோசடி செய்த சேலம் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-22 20:09 GMT

பங்கு சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி 25 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.4 கோடி மோசடி செய்த சேலம் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பங்குசந்தையில் அதிக லாபம்

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் ஆனந்தா நகரை சேர்ந்தவர் தணிகைசெல்வன் (வயது 41). இவர் குவைத் நாட்டில் பிசியோதெரப்பிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் சின்னமாசமுத்திர காலனியை சேர்ந்த என்ஜினீயரான மணிகண்டன் (30) என்பவரது யூடியூப் சேனலை பார்த்தார். அதில் ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து மணிகண்டனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தணிகைசெல்வன் பேசினார். அப்போது அவர் பங்கு சந்தை வர்த்தகம் மிகவும் கவர்ச்சிகரமான முதலீடு திட்டத்துடன் அதிக லாபம் தரக்கூடியது என்றார். மேலும் அவர், இந்த திட்டத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 12 முதல் 18 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார்.

மோசடி

இதை உண்மை என நம்பிய தணிகைசெல்வன் அவரது வங்கி கணக்குக்கு ரூ.22¾ லட்சம் வரை முதலீடு செய்தார். அவர் முதலீடு செய்ததை பார்த்து தணிகைசெல்வனின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் முதலீடு செய்தனர். ஒரு குறிப்பிட்ட மாதம் வரை அவர்களுக்கு லாபம் தொகை கிடைத்தது. அதன்பிறகு பணம் ஏதும் வழங்கப்படவில்லை.

இதையடுத்து தணிகைசெல்வன் அவருக்கு தொடர்பு கொண்டு முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் மணிகண்டன் வழங்கவில்லை. இதனிடையே அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது. பின்னர் இந்த மோசடி குறித்து தணிகைசெல்வன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை சந்தித்து புகார் கொடுத்தார்.

என்ஜினீயர் கைது

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் தணிகைசெல்வன் உள்பட 25 பேரிடம் என்ஜினீயர் மணிகண்டன் லாபத்துடன் சேர்த்து ரூ.4 கோடியே 7 லட்சத்து 48 ஆயிரத்து 979 மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அவரது மனைவி அபிராமி இருந்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்