சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடியில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த முனையம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் ரூ.2,400 கோடியில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த முனையத்தை வருகிற 27-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Update: 2023-03-14 18:52 GMT

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2,20,972 சதுர மீட்டா் பரப்பில் கட்ட திட்டமிடப்பட்டது.

இந்த பணிகள் 2 கட்டங்களாக செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட பணியில் 6 அடுக்கு மல்டி லெவல் காா் பாா்க்கிங், நவீன வசதிகளுடன் வருகை, புறப்பாடு முனையம் ஆகியவைகளும், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்ட்டா்கள், வி.வி.ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன.

முதற்கட்ட கட்டுமானப் பணிகள்

விமான நிலைய முதல் கட்ட பணி பன்னாட்டு வருகை முனையம் 42,300 சதுர அடியில் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய முனையத்தில் கீழ் தளத்தில் பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில் சர்வதேச பயணிகள் வருகை பகுதியாகவும், பயணியருக்கான வழக்கான நடைமுறைகள் கையாளப்படும். 2-வது தளத்தில் பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. மற்ற தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. 5 தளங்களுடன் புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. புதிய முனையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு, கருவிகள், உபகரணங்களின் சோதனைகள் நடந்து வருகின்றன.

35 கோடி பயணிகள்

இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா முடிந்ததும் தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனையம் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதன் பின் 2-ம் கட்ட கட்டுமான பணி தொடங்கப்படும். இதையடுத்து சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய முனையத்தில் கீழ்தளத்தில் விமான பயணிகள் லக்கேஜ்கள் உடைமைகள் கையாளப்படும் பணிகள் கடந்த 10-ந் தேதியிலிருந்து செயல்பாட்டிற்கு வந்து உள்ளன.

அதேபோல் புதிய முனையத்தில் அமைக்கப்பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகளை கடந்த மாதம் 4-ந் தேதி விமான போக்குவரத்து துறை மந்திரி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி வருகை

இந்த நிலையில் புதிய முனையத்தினை செயல்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் முறைப்படி தொடங்கி வைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் 27-ந் தேதி மதுரை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் பின் ஹெலிகாப்டரில் மதுரை வந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார். சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் இந்த புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் பிரதமர் சென்னை வருகை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. புதிய முனையம் திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டு துரிதமாக பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்