திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன
திருப்பூர் மாவட்டத்தில் 24 டாஸ்மாக் கடைகளை டாஸ்மாக் அதிகாரிகள் மூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்படும் என்ற அரசு அறிவித்தது. திருப்பூர் மாவட்டத்தில் 251 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் 24 மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 14 கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. ஒரே வீதியில் 2 கடைகள் அருகருகே அமைவது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியில் உள்ள கடைகள், பார் இல்லாத டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி 24 டாஸ்மாக் கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை டாஸ்மாக் திருப்பூர் மாவட்ட மேலாளர் சுப்பிரமணியம் தலைமையில் ஊழியர்கள் அறிவிக்கப்பட்ட 24 டாஸ்மாக் கடைகளை மூடி சீல் வைத்தனர். திருப்பூர் மாநகரில் தாராபுரம் ரோடு அரசு மருத்துவமனை அருகே, யூனியன் மில் ரோடு, மண்ணரை கருமாரம்பாளையம், எம்.எஸ்.நகரில் டி.என்.கே. புரம் மெயின் ரோடு, கரட்டாங்காடு, தொட்டிய மண்ணரை ராதாநகர், கோவில்வழி பட்டத்தரசியம்மன் தோட்டம், கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர். லே அவுட், பி.என்.ரோடு நெசவாளர் காலணி, திருப்பூர் மத்திய பஸ் நிலையம் புதுமார்க்கெட் வீதி, ஆண்டிப்பாளையம் ஏ.கே.பி.தோட்டம், மண்ணரை தம்பிதோட்டம், பி.என்.ரோடு அண்ணாநகர், மத்திய பஸ் நிலையம் பின்புறம் ஜம்மனை வீதி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 14 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதுபோல் அவினாசி பழங்கரை, அவினாசி கோவை மெயின் ரோட்டில் கால்நடை மருத்துவமனை அருகே, உடுமலை சரவணா வீதி, உடுமலை பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் சோளக்கடைவீதி, தாராபுரம் புதிய போலீஸ் நிலைய ரோடு, காங்கயம் பள்ளக்காட்டுதோட்டம் வீரணம்பாளையம், தாராபுரம் அனுமந்தாபுரம் 5 மூக்கு கார்னர், வெள்ளகோவில் சின்னக்கரை குறுக்கம்பாளையம் பிரிவு மூலனூர் ரோடு, அவினாசி செம்பியநல்லூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மாவட்டத்தில் நேற்று முதல் 24 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.