வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-10 10:23 GMT

முத்தூர்

முத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை-பணம் திருட்டு

திருப்பூர் மாவட்டம் முத்தூர் - காங்கயம் சாலை ரங்கப்பையன்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி யசோதா (வயது 72). இவர் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு அய்யம்பாளையத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வைர நெக்லஸ், தங்க சங்கிலி உட்பட மொத்தம் 24 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இந்த திருட்டு சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசில் யசோதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் மகள் வீட்டிற்கு யசோதா சென்றதை அறிந்த ஆசாமிகள் அங்கு வந்து வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். முத்தூர் பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்