ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 24 லட்சம் பேர் வருகை

கடந்த ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 24 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Update: 2023-01-02 18:45 GMT

ஊட்டி, 

கடந்த ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 24 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

தாவரவியல் பூங்கா

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தாவரவியல் பூங்காவிற்கு 7½ லட்சம் பேர் வருகை தந்தனர். கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடை சீசன் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 2-வது சீசன் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.

24 லட்சம் சுற்றுலா பயணிகள்

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு தொடர் விடுமுறையை கழிக்க தாவரவியல் பூங்காவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். கொரோனாவுக்கு பின்னர் வருகை அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் பேர் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வருவார்கள். கடந்த 2017-ம் ஆண்டு அதிகபட்சமாக 30 லட்சம் பேர் வந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு 5,03,545 பேர் மட்டுமே வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் கடந்த ஆண்டில் 24 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்