குமரிக்கு கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சா பறிமுதல்

கடந்த 1 மாதத்தில் குமரிக்கு ரெயில் மூலமாக கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2022-08-27 14:54 GMT

நாகர்கோவில்:

கடந்த 1 மாதத்தில் குமரிக்கு ரெயில் மூலமாக கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வங்கி கணக்கு முடக்கம்

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இதுவரை 130-க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு ரெயில் மூலமாக கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ரெயில்களில் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

24 கிலோ கஞ்சா

அந்த வகையில் புனேயில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 1 மாதத்தில் மட்டும் அடுத்தடுத்த சம்பவங்களாக வௌி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 கிலோ குட்காவும் கடந்த 20-ந் தேதி சிக்கியது.

நாகா்கோவிலுக்கு கஞ்சா மற்றும் குட்கா ஆகியவை முன்பதிவு அல்லாத பெட்டிகள் மூலமாகவே கடத்தி வரப்பட்டு உள்ளன. போதை பொருட்களை கடத்தி வரும் மர்ம ஆசாமிகள் ரெயில் நிலையத்தில் போலீசை பார்த்ததும் போதை பொருள் அடங்கிய பேக்கை இருக்கைக்கு அடியில் போட்டுவிட்டு ஒன்றும் தொியாததுபோல தப்பி விடுகிறார்கள். இதன் காரணமாக குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

இதற்கிடையே குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகிறார்கள். மேலும் கடந்த 8 மாதங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, போக்சோ, கஞ்சா, குட்கா, அரிசி மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 55 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்