தேனி மாவட்டத்தில் கனமழைக்கு 24 வீடுகள் சேதம்; தபால் அலுவலர் பலி
தேனி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 24 வீடுகள் சேதம் அடைந்தன. தேவாரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தபால் அலுவலர் பலியானார்.
தேனி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 24 வீடுகள் சேதம் அடைந்தன. தேவாரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தபால் அலுவலர் பலியானார்.
கனமழை
தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 599 மி.மீ. மழை பெய்தது. இதன் சராசரி 49.92 மி.மீ. ஆகும். அதிகபட்சமாக அரண்மனைப்புதூரில் 127 மி.மீ. மழை பெய்தது. இதேபோல் ஆண்டிப்பட்டியில் 24 மி.மீ., போடியில் 25.6 மி.மீ., கூடலூரில் 28.4 மி.மீ., மஞ்சளாறு அணையில் 63 மி.மீ., பெரியகுளத்தில் 91 மி.மீ., சோத்துப்பாறையில் 25 மி.மீ., உத்தமபாளையத்தில் 13.4 மி.மீ., வைகை அணையில் 69.2 மி.மீ., வீரபாண்டியில் 64.2 மி.மீ., முல்லைப்பெரியாற்றில் 38 மி.மீ., தேக்கடியில் 30.2 மி.மீ. என மழை அளவு பதிவானது.
இந்த மழையால் தேனியில் 4 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. அதுபோல், பெரியகுளம் பகுதியில் 9 வீடுகள், உத்தமபாளையம் பகுதியில் 9 வீடுகள், ஆண்டிப்பட்டி, போடியில் தலா 1 வீடு என மொத்தம் 24 வீடுகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த வீடுகளை வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்தனர்.
ஓடையில் உடைப்பு
மேலும் தேனி என்.ஆர்.டி.நகரில் சமதர்மபுரம் செல்லும் சாலையில் இருந்த ஒரு பழமையான மரத்தின் கிளை நேற்று காலை முறிந்து விழுந்தது. இதனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த மின்வாரிய பணியாளர்கள் மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்சார வினியோகம் சீரானது.
இதேபோல் தேவதானப்பட்டியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதம் அடைந்தது. தேனி குட்செட் தெருவில் வீடு இடிந்து விழுந்ததில் இளவரசி (வயது 52) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், விளை நிலங்களில் மண் மேவியது. ஓடையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அகமலை, சொக்கனலை மலைக்கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதையிலும் பலத்த மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
தபால் அலுவலர் பலி
தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 75). ஓய்வுபெற்ற தபால் அலுவலர். இவர் நேற்று மாலை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த செல்லமுத்து என்பவரது வீட்டின் சுவர் மழையால் இடியும் நிலையில் இருந்தது. இதற்கிடையே அதன் அருகில் நடந்து வந்த சண்முகநாதன் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் கிணறு
மயிலாடும்பாறையில் பெய்த கனமழையால் அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அப்போது செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல் மயிலாடும்பாறை வடக்குத்தெருவில், மந்தையம்மன் கோவில் முன்பு இருந்த பழமையான கிணறு இடிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை ஊராட்சி தலைவர் பார்வதி அன்பில்சுந்தரம், மழைக்கு இடிந்த வீடு மற்றும் கோவில் கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.