24 மணி நேரமும் மது விற்பனை
சின்னமனூர் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூரில் மாநில நெடுஞ்சாலையில் 2 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சின்னமனூர் பகுதியில் அனுமதியின்றி அதிகாலை முதல் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடந்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி அருந்தி விட்டு சாலையோரம் விழுந்து கிடக்கின்றனர். இன்னும் சிலர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு சாலையில் நடந்து செல்பவர்கள் பலர் படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே சின்னமனூர் பகுதியில் மதுபான விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் பகல், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்லவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.