24 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
கடத்தலுக்கு முயன்ற 24 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு விருதுநகர் அருகே சூலக்கரை மேட்டில் ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் மக்களிடமிருந்து ஒரு நபர் ரேஷன் அரிசியை வாங்கி வேனில் கடத்த ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின்பிரிஜிட்மேரி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ரேஷன் கடையில் இருந்து அரிசி வாங்கி வரும் பொது மக்களிடம் வேனில் இருந்த நபர் பணம் கொடுத்து அரிசியை வாங்கி வேனில் சேகரித்துக் கொண்டிருந்தார். வேனில் இருந்த தலா 40 கிலோ கொண்ட 24 முடை ரேஷன் அரிசியை வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். வேனில் அரிசி கடத்தலுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த மதுரை காமராஜர் நகர் தும்மடி கிருஷ்ண ஐயங்கார் தெருவை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 50) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.