சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் 23 மி.மீ. மழை

சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் 23 மி.மீ. மழை

Update: 2022-06-25 14:13 GMT

கோவை

சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 23 மி.மீ. மழை பெய்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நீர்மட்டம் சரிவு

கோவை மாநகரில் உள்ள 32 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநில எல்லைக்குள் அமைந்து உள்ள இந்த அணையானது 50 அடி உயரம் கொண்டது. ஆனால் இந்த அணையில் 45 அடி உயரத்திற்கும் மட்டுமே தண்ணீர் தேக்கி வைத்து கொள்ள கேரள அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

சிறுவாணி அணையில் இருந்து தினமும் 101 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்படுகிறது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் 15 அடியாக சரிந்தது. இதனிடையே அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை கேரள அதிகாரிகள் குறைத்தனர். இதன்காரணமாக கோவைக்கு தினமும் 50 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே கிடைத்தது. இதனால் மாநகரில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மழையால் நீர் வரத்து அதிகரிப்பு

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடும்படி கேரள முதல்-மந்திரிக்கு கடிதம் அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீரை திறக்க கேரள முதல்-மந்திரி உத்தரவிட்டார். இதன்பலனாக கோவைக்கு தற்போது தினமும் 101 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கிறது. அதிகப்படியான தண்ணீர் எடுக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் நேற்று மட்டும் 23 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதன்காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் பெய்ய தொடங்கும். இதனால் அணையின் நீர்மட்டம் உயரும். ஆனால் நடப்பாண்டில் ஜூன் மாதம் தொடங்கி 3 வாரங்கள் முடிந்த நிலையில் பருவமழை தொடங்காமல் ஏமாற்றி வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது சிறுவாணி அணையில் 14.5 அடிக்கு தண்ணீர் உள்ளது. பருவமழை தொடர்ந்து பெய்தால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்