வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கொடைக்கானல் தாலுகா பூம்பாறை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ரவிச்சந்திரனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.