ஊர்வலமாக செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது

நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-12 19:33 GMT

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகாய இனிதா தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக நேற்று கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் கட்சியினர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று மனு கொடுக்க இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

இதை அறிந்த போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஊர்வலமாக செல்லக்கூடாது. நேரடியாக சென்று மனு அளிக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயற்சி செய்தனர். இதையடுத்து 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொண்டு வந்த மனுவை போலீஸ் அதிகாரிகள் வாங்கி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

அந்த மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசே மது விற்பனையை நடத்துவது மிகவும் அவலமாகும். இதன் மூலம் அரசு பல்வேறு குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளது. மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 262 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்