சென்னை அருகே அதிரடி சோதனை ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்திய 22 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

சென்னை அருகே நடத்திய சோதனையில், ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-27 05:18 GMT

சென்னை அருகே ஆந்திர மாநில எல்லையில், திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் வழியாக வரும் ஆந்திர மாநில பஸ் ஒன்றில் பெரிய அளவில் 2 பேர் கஞ்சா கடத்தி வருவதாக மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநில போதைப்பொருள் தடுப்புப்பிரிவு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் எளாவூர் சோதனை சாவடி அருகே மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்த பஸ் ஒன்றை மடக்கி சோதனை போட்டனர்.

அப்போது பஸ்சில் தலையில் முக்காடு போட்டு, தூங்கியபடி வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் துணி மூட்டைபோல வைத்திருந்த 2 பெரிய மூட்டைகளை அவிழ்த்து போலீசார் சோதனை போட்டனர். அதற்குள் 11 சிறிய மூட்டைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதில் இருந்த 22 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம், பாறை குட்டம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 20), திருச்சி துவாக்குடியைச்சேர்ந்த சிரஞ்சீவி (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் சில்லரை விலைக்கு விற்பதற்காக கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதை கடத்தி வருவதற்கு கைதான இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் கிடைக்கும் என்று போலீசாரிடம் அவர்கள் கூறியதாக தெரிகிறது. சென்னையில் இந்த கஞ்சாவை விலைக்கு வாங்க இருந்த சில்லரை வியாபாரிகள் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்