கார் மோதி 22 ஆடுகள் பலி
சாத்தூர் அருகே ஆடுகள் மீது கார் மோதிய விபத்தில் 22 ஆடுகள் பலியானது.
சாத்தூர்.
சாத்தூர் அருகே ஆடுகள் மீது கார் மோதிய விபத்தில் 22 ஆடுகள் பலியானது.
ஆடுகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிமுருகன் (வயது 23). இவர் 500 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இதற்காக அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கிடை அமைப்பார். அவர் தற்போது சாத்தூர் அருகில் உள்ள சின்னக்காமன்பட்டி பகுதியில் கிடை போட்டு வளர்த்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு சின்னக்காமன்பட்டி காட்டுப்பகுதியில் சென்ற சில ஆடுகள் திரும்ப வராததால் அப்பகுதியில் பாண்டிமுருகன் தேடி சென்றார். காணாமல் போன 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை கண்டுபிடித்து மீண்டும் கிடைப்போட்ட இடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
கார் மோதியது
சின்னகாமன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாத்தூர்-சிவகாசி சாலையை ஆடுகள் கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி வந்த கார் சாலையை கடந்து சென்ற ஆடுகள் மீது மோதியது. இதில் ஆடுகள் தூக்கி வீசப்பட்டன. இதில் பலத்த காயமடைந்த 22 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்தன.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சிவகாசி அருகே தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அனந்தனிடம்(43) விசாரணை நடத்தினர். இதில் அவர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.