சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.21 கோடி வருமானம்-வரிவசூலில் தமிழகத்தில் 2-வது இடம்
சிவகாசி மாநகராட்சிக்கு வர வேண்டிய வரிகளில் ரூ.21 கோடியே 29 லட்சத்தை வசூல் செய்த அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் 2-வது இடத்தை பெற்றுள்ளனர்.;
சிவகாசி
சிவகாசி மாநகராட்சிக்கு வர வேண்டிய வரிகளில் ரூ.21 கோடியே 29 லட்சத்தை வசூல் செய்த அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் 2-வது இடத்தை பெற்றுள்ளனர்.
மாநகராட்சிகள்
தமிழகத்தில் சிவகாசி, தாம்பரம், நாகர்கோவில், ஈரோடு, திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, தஞ்சாவூர், கோவை, காஞ்சிபுரம், ஓசூர், ஆவடி, கும்பகோணம், கரூர், திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி, சேலம், மதுரை, கடலூர் ஆகிய 20 மாநகராட்சிகள் உள்ளது. இந்த மாநகராட்சிகளில் கடந்த 2 மாதங்களாக 2023-2023-ம் நிதியாண்டிற்கான வரி வசூலில் வருவாய் பிரிவினர் ஈடுபட்டு வந்தனர்.
அவர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட வீடுகள், தொழில்நிறுவனங்கள், காலி மனைகளுக்கான வரிகள், குடிநீர் கட்டணம், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகைகள் மற்றும் குத்தகை கட்டணங்கள் வசூலித்து வந்தனர்.
2-வது இடம்
இதில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.30 கோடி வசூலாக வேண்டி இருந்தது. இதில் ரூ.21 கோடியே 29 லட்சத்து 25 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.9 கோடியே 50 லட்சம் வசூலாக வேண்டி உள்ளது. இதில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள சொத்துக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய தொகை ரூ.7 கோடியே 50 லட்சம் என்று கூறப்படுகிறது.
மீதமுள்ள ரூ.2 கோடியை வருகிற 10-ந்தேதிக்குள் வசூலிக்க நடவக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சிவகாசி மாநகராட்சி 69 சதவீதம் வரிகளை வசூல் செய்து 2-வது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடத்தை தாம்பரம் மாநகராட்சியும், 20-வது இடத்தை கடலூர் மாநகராட்சியும் பெற்றுள்ளது.
நடவடிக்கை
சிவகாசி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை வருகிற 10-ந்தேதிக்குள் செலுத்தி உரிய ரசீதுகளை மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மாநகராட்சிக்கு வரிவசூல் செய்த வருவாய் பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா காளிராஜன், பொறுப்பு ஆணையாளர் முகமது சாகுல் அமீது ஆகியோர் பாராட்டினர்.