21 சமூகநீதி போராளிகளுக்கு அரங்கம், ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம்

விழுப்புரத்தில் 21 சமூகநீதி போராளிகளுக்கான அரங்கம், ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டப பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2023-06-30 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், ஏழை- எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபமும் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி பகுதியில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நினைவு அரங்கம்- மணிமண்டபம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத்தொடரில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ம் ஆண்டில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.45 கோடி மதிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் சமூகநீதி தியாகிகள் அரங்கம் அமைத்திட அறிவித்தார்.

மேலும் 6.9.2021 சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021-2022-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானிய கோரிக்கையின்போது முன்னாள் அமைச்சரும் ஏழை, எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமான ஏ.கோவிந்தசாமியின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பில் உருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

விரைவில் பணிகள் தொடங்கப்படும்

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், ஏ.கோவிந்தசாமிக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும் அமைத்திடும் வகையில் விழுப்புரத்தில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 1.12 ஹெக்டேர் பரப்பளவில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 28-ந் தேதியன்று நடைபெற்ற அரசு உயர் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தின்போது, இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், ஏ.கோவிந்தசாமிக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும் அமைப்பதற்கான பணிகள் எல்லாம் வெகு விரைவில் தொடங்கப்பட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் அவை முடிக்கப்படும். அதற்கான பணிகளை பொதுப்பணித்துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து செய்து கொண்டிருக்கிறார்கள். வெகு விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்து அதனை திறந்து வைப்பார். சிறப்பான முறையில் செயல்பட்டு மக்களுடைய முதல்வராக இருக்கும் அவரின் திட்டங்கள் நிச்சயமாக தொடர்ந்து வெற்றி பெறும் என்பதில் வேறுபட்ட கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்