கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பிளம்பர் பலி
திருபுவனை அருகே கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பிளம்பர் உயிரிழந்தார். நிவாரணம் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை அருகே கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பிளம்பர் உயிரிழந்தார். நிவாரணம் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளம்பர்
திருபுவனை அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45) பிளம்பர். இவருக்கு ரமா (39) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
திருபுவனை பாளையம் ஐ.ஓ.பி. வங்கி தெருவில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை கழிவுநீர் தொட்டியில் குழாய்களை மாற்றும் பணியில் ரமேஷ் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ரமேசை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
பிணமாக மீட்பு
இந்தநிலையில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருபுவனை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கழிவுநீர் தொட்டியில் இருந்த கழிவுநீரை வெளியேற்றினர். அதன்பின் ரமேசை மீட்ட போது அவர் பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ரமேசின் மனைவி ரமா, மகள்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
உறவினர்கள் வாக்குவாதம்
இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீசார் ரமேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாகனத்தில் ஏற்ற முயன்றனர். ஆனால் அதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இறந்த ரமேசின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும், அதுவரை உடலை எடுக்க விடமாட்டோம் என்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்குப்பின் ரமேசின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.