பாம்பனில் உள்வாங்கிய கடல் - மீனவர்கள் அச்சம்...!
பாம்பனில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.;
ராமேஸ்வரம்,
பாக்ஜலசந்தி, தலைமன்னார் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் தாக்கமாக ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய கடலோர பகுதியில் கடல் அலை வீசி வருகிறது. இப்பகுதி சில இடங்களில் அவ்வப்போது கடல் உள்வாங்கிவருகின்றது.
இந்த நிலையில் இன்று பாம்பன் வடக்கு கடல் பகுதியில் அதிகாலையில் ஏறத்தாழ 200 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
மேலும் நீர் மட்டம் குறைவால் மீன்பிடி படகுகளை மீட்க முடியவில்லை. இன்று மாலையில் கடல் நீர் மட்டம் உயர்ந்த உடன் அந்த படகுகளை மீட்டு மீன்பிடிக்கச் செல்ல வாய்ப்புள்ளது என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.