விடுதலை தீர்ப்புக்கு பின் திருக்குறளை மேற்கோள்காட்டி பேரறிவாளன் பேட்டி
நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல என பேரறிவாளன் கூறினார்.
வேலூர்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, 161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், 'பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி' என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
இந்தநிலையில், விடுதலைக்கு பின் பேரறிவாளன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்“ நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது.
30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி. என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார். தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது.
31 ஆண்டு சட்டபோராட்டத்தில் ஒவ்வொரு முறை விழும்போது எனது தாயாரை பார்க்க அஞ்சுவேன்.
பெற்றோருக்கு வயது அதிகமாகும் நிலையில், அவர்களது வாழ்க்கையை திருடுகிறோமோ என்று எண்ணினேன். தாய், தந்தை உயிரோடு இருக்கும்போதே எனது விடுதலையை பார்க்க வேண்டும் என்று கருதினேன் என்றார்.
முன்னதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்திப்பில்,
வலியும், வேதனையுமான 31 ஆண்டு கால சிறைவாசத்தை எனது மகன் கடந்து வந்துள்ளார்; எனது மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியுள்ளோம். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.