ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை- கே.எஸ்.அழகிரி
ப.சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ. சோதனை என்பது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அலுவலகம் திறப்பு
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாநிலச்செயலாளர் அடையாறு பாஸ்கர், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், ஹசன் மவுலானா, ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், எம்.பி.ரஞ்சன் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பழிவாங்கும் நடவடிக்கை
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டிலும், அலுவலகத்திலும் சி.பி.ஐ. சோதனையிடுவது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. பொது வாழ்வில் ப.சிதம்பரத்தை போன்று நேர்மையும், நாணயமும் மிக்க அரசியல்வாதிகளை தேடி கண்டுபிடிப்பது சிரமம். அவருடைய காலத்தில் இந்த தேசத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார்.
பொருளாதார சிந்தனைகள் அவரிடம் இருந்து வந்தவைதான். மன்மோகன் சிங்கும், அவரும் சேர்ந்துதான் இந்தியாவின் வறுமையை ஒழிப்பதில் மிகப்பெரிய பங்கு வகித்தார்கள். கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் என்பது அவரது காலத்தில் கொண்டுவரப்பட்டது.
எத்தனை முறை சோதனை
இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டம் அவர் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அவரது புகழை, பெருமையை குலைக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசாங்கம் கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார்கள். எத்தனை முறை அவரது வீட்டில் சோதனையிடுவீர்கள். ஒருமுறை சோதனையிடும்போதே அந்த வீட்டில் உள்ள அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு போய்விடுகிறீர்கள். அதன்பிறகு புதிதாக ஏதாவது அங்கு வந்துள்ளதா? முதல்முறை சோதனையில் உங்களுக்கு அது எல்லாம் கிடைக்கவில்லையா? 2-வது முறை சோதனை செய்தபோதும் கிடைக்கவில்லையா?
தமிழை சிதைப்பதற்கான முயற்சியில்...
சி.பி.ஐ. அதிகாரிகள் முதலில் வெளியில் வந்து சொல்ல வேண்டும். என்ன சோதனை செய்தோம், என்ன கிடைத்துள்ளது என்று சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன என்று சொல்வது மிகவும் கீழ்த்தரமான செயல். எனவே, மத்திய அரசாங்கத்தை நாங்கள் எச்சரிக்க விரும்புகிறோம். இது ஒரு நேர்மையற்ற செயல்.
கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கு வந்து கொஞ்சம் பேச கற்றுக்கொண்டார். அதற்கு முன்பு அவருக்கு உளவு பார்க்கத்தான் தெரியும். தமிழை பிற மாநிலங்களில் 3-வது பாட மொழியாக கொண்டு வருவதற்கு நான் முயற்சி செய்கிறேன் என்று சொல்கிறார்.
நீங்கள் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம். இங்கு தமிழ் உயிர் வாழ்வதற்கு எங்களுக்கு வழிவிட்டாலே போதும். இங்கே தமிழை சிதைப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் இறங்க வேண்டாம் என்பதுதான் எங்களது தாழ்மையான வேண்டுகோள்.
ப.சிதம்பரம் எம்.பி.யாக அதிக வாய்ப்பு
மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக நான் யாருக்கும் இன்னும் கோரிக்கை வைக்கவில்லை. யாரும், யாருக்கும் இன்னும் கோரிக்கை வைக்கவில்லை. மீண்டும் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.