புதுக்கோட்டையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு விவகாரம்: ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் நேரடி விசாரணை பயனாளிகளின் வீடுகளை ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.7 கோடி முறைகேடு விவகாரத்தில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சாமுவேல் நேரடி விசாரணை நடத்தினார். பயனாளிகளின் வீடுகளை ஆய்வு செய்தார்.;

Update: 2022-05-17 17:35 GMT

புதுக்கோட்டை:

வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வீடுகள் கட்டப்படாமலேயே நிதி வழங்கப்பட்டதில் ரூ.7 கோடி முறைகேடு நடந்ததாக அதிகாரிகள் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு ஊழியர்கள் 24 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் தணிக்கையை மீண்டும் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.

கூடுதல் இயக்குனர் வருகை

இந்த நிலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததா? இல்லையா? எனவும், இந்த பரபரப்பு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை நடத்த சென்னையில் இருந்து ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சாமுவேல் நேற்று காலை புதுக்கோட்டை வந்தார். புதுக்கோட்டையில் டி.வி.எஸ்.கார்னர் அருகே நெடுஞ்சாலை துறைக்குரிய ஆய்வு மாளிகையில் தங்கிய அவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகளுடன், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த முறைகேடு விவகாரம் தொடர்பாகவும் கலந்தாய்வு மேற்கொண்டார். மேலும் கலெக்டர் கவிதாராமுவை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

விசாரணை நடத்தி நடவடிக்கை

முன்னதாக புதுக்கோட்டையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், " இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்" என்றார். அதனை தொடர்ந்து அவர் நேரடி விசாரணை நடத்துவதற்காக ஆவுடையார்கோவில் புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியவர்களின் வீடு, தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட வீடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

கிராமங்களில் ஆய்வு

இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சாமுவேல், ஒன்றிய ஆணையர் கருணாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், பொறியாளர்கள் சிங்காரம், ராஜேந்திரன் மற்றும் கீழச்சேரி ஊராட்சி தலைவர் அமுதா சக்திவேல் ஆகியோருடன் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில் நெட்டியேந்தல் கிராமத்திலும், கரூர் ஊராட்சியில் இளம்பாவயல், விளாங்காட்டூர் ஆகிய கிராமங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அலுவலர்களுடன் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினார். 

மேலும் செய்திகள்