திருமயம் அருகே திறந்தவெளி சேமிப்பு நிலையத்தில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
திருமயம் அருகே திறந்தவெளி சேமிப்பு நிலையத்தில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தது. இதையடுத்து ஊழியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு மண்டல மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருமயம்:
நெல் மூட்டைகள் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே துளையனூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 லட்சத்திற்கும் மேல் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கன மழையால் இங்குள்ள 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.
பல மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் மழை பெய்ததன் காரணமாக முளைத்து நாற்றுகளாக காட்சியளிக்கின்றன.
2 பேர் பணியிடை நீக்கம்
நெல்மூட்டைகளை சரிவர பாதுகாக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த நெல் சேமிப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ரவி மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் கூட்டுறவு மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
ரூ.70 லட்சம் இழப்பீடு
இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் இளவரி இன்று நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
துளையனூர் திறந்தவெளி சேமிப்பு நிலையத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையின் காரணமாக கெட்டுப்போய் சிதைந்து உள்ளது. நெல் மூட்டைகளை ஏற்றம் செய்யாமல் இருந்த காரணத்தால் மேலும் மூட்டைகள் எண்ண முடியாத நிலையில் உள்ளது. இதனை ஏற்றம் செய்யாமல் கூட்டுறவு மண்டல மேலாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் அலுவலகத்திலிருந்து 2 அலுவலர்களை அனுப்பி வைத்து தேங்கி கிடக்கின்ற நெல் மூட்டைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் குறைவு என்று எடுத்து வரச்சொல்லி கட்டளையிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி அவர்கள் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் குறைவு என்று எழுதிக் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் நெல் சேமிப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 4 பேரில் ரவி மற்றும் சரவணன் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 2 பேரும் ரூ.70 லட்சம் இழப்பீடு செலுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
மீண்டும் பணி வழங்க வேண்டும்
மேலும் அந்த நபர்கள் பணத்தை செலுத்த இயலாது என்று கூறியதற்கு கட்டாயமாக கட்ட வேண்டும். இல்லையென்றால் ஜெயிலுக்கு தான் போக வேண்டும் என்று மண்டல மேலாளர் கூறியுள்ளார். இதுகுறித்து நிர்வாக இயக்குனர் ஒரு குழுவினை அமைத்து ஆய்வு செய்து சேதமான நெல் மூட்டைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான மூட்டைகள் இருக்குமேயானால் அதற்கான இழப்பீடு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.