திமுக ஆட்சியில்தான் அம்பேத்கரின் கனவு செயல் வடிவம் பெறுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அபேத்கரின் கனவை செயலாக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-17 15:33 GMT
சென்னை, 

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘தலித் உண்மைகள்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “அபேத்கரின் கனவை செயலாக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி இவை நான்கும் இணைந்து பயணிக்கும் குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் கனவு. 

திமுக தமிழ்நாட்டில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான சமூக நீதியை முறையாக நிறைவேற்ற எதிர்கட்சியாக இருந்தபோதும் போராடி பல தியாகம் செய்துள்ளோம். நாடு வளர மாநிலமும், மாநிலம் வளர மாவட்டமும், மாவட்டம் வளர கிராமங்களும் வளர வேண்டும். சமூகநீதி, சமத்துவ பூங்காவாக மாறினால்தான் உலகின் வல்லரசாகவும், நல்லரசாகவும் இந்தியா மாறும். 

பட்டியலின, பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 16-ல் இருந்து 18 ஆக இட ஒதுக்கீட்டை 1971 ம் ஆண்டு கருணாநிதி உயர்த்தினார். 1989 ம் ஆண்டு பழங்குடியினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியது, 2009 ஆம் ஆண்டு அருந்திதியருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியது திமுக தான். அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலைகழகம் முதலில் அமைத்தது திமுகதான், சமத்துவபுரம் தாட்கோ, புதிரை வண்ணார், தூய்மை பணியாளர் நல வாரியங்கள் அமைத்தது திமுக ஆட்சிதான்

தமிழகத்தில் நடப்பது எனது அரசு அல்ல, நமக்கான அரசு. அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இறையான்மை, சமதர்மம், மத சார்பின்மை, மக்களாட்சி நான்கும் இணைந்து பயணிக்கும் குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் கனவு. அம்பேத்கரின் எண்ணங்களை பிசகாமல் திமுக அரசு நிறைவேற்றுகிறது” என்று அவர் கூறினார். 

மேலும் திமுகவின் காலம் என்பது முற்போக்கு, புரட்சிக் கருத்தியல் படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றிபெறும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிய காலமாக இருந்ததாகவும், ‘இந்தியாவில் தலித் சினிமா’ என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்க திரைப்படங்கள் அமைந்திருப்பதை இயக்குநர் பா.ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்