டெல்லி, சென்னை உள்பட ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் நடைபெற்ற சிபிஐ சோதனை நிறைவு
டெல்லி, லோதி எஸ்டேட்டில் உள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை நிறைவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதிமந்திரியுமான ப. சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வெளிநாட்டு பணபரிவர்தனையில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனிடையே ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில்,
டெல்லி, சென்னையில் எனது வீடுகளில் சிபிஐ நடத்தும் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. சென்னை மற்றும் டெல்லியில் உள்ள எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ காண்பித்த எப்.ஐ.ஆரில் எனது பெயர் இல்லை. சோதனை தருணம் சுவாரஸ்யமானது என்றார்.
இந்நிலையில், டெல்லி, லோதி எஸ்டேட்டில் உள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனையும் நிறைவு பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
சோதனை நடத்துவது ஏன்? என சிபிஐ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது அதில்,
சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு 263 விசாக்களை முறைகேடாக பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச்சந்தை ஊழலில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு தொடர்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனர்களுக்கு விசா வாங்கி தந்தற்காக ரூ 50 லட்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துவது குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.