பிளஸ் 1 பொதுத்தேர்வு: முதல் நாளில் 43,533 மாணவர்கள் ஆப்சென்ட்
தமிழகத்தில் இன்று தொடங்கிய 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் 43,533 மாணவர்கள் ஆப்சென்ட் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள்.
தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் முறையே இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தமிழகத்தில் இன்று தொடங்கிய 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நாளில் 43,533 மாணவர்கள் ஆப்சென்ட் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வில் 2 பேர் முறைகேடு செய்துள்ளதாக தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.