கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி கைது
வில்லியனூர் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வில்லியனூர் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசார் ரோந்து
வில்லியனூர் அருகே உள்ள பத்துக்கண்ணு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 3 பேரும் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். அப்போது ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மற்ற 2 பேரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்டவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ரவுடி கைது
விசாரணையில் அவர், வள்ளுவன் பகுதியை சேர்ந்த ஜீவா என்ற ஜீவரத்தினம் (வயது 30) என்பதும், தனது இடுப்பில் கத்தியை மறைத்து வைத்திருந்தபடி சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. அவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது. இதையடுத்து போலீசார் ஜீவரத்தினத்தை கைது செய்தனர். தப்பியோடிய அவரது கூட்டாளிகள் பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த முகேஷ், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.