பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
புதுச்சேரியில் புதிய பஸ் நிலையத்தில் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மதுபானங்கள் கடத்தலை தடுக்க புதுவை எல்லையில் போலீசார் வாகன சோதனையும் செய்தனர்.
புதுச்சேரியில் புதிய பஸ் நிலையத்தில் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மதுபானங்கள் கடத்தலை தடுக்க புதுவை எல்லையில் போலீசார் வாகன சோதனையும் செய்தனர்.
பயணிகளிடம் திருட்டு
புதுச்சேரிக்கு வார இறுதிநாட்கள், பண்டிகை காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்களில் இளைஞர்கள் பெரும்பாலும் பஸ்களில் வருகின்றனர்.
புதுச்சேரியை சுற்றிபார்த்துவிட்டு அவர்கள் ஊர் திரும்பும்போது பஸ்களில் அவர்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன், மடிக் கணினி மற்றும் உடமைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்செல்வதாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதன் எதிரொலியாக புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் வாரத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், பயணிகளிடம் அவர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அறிவுறுத்தினார்கள்.
எல்லையில் வாகன சோதனை
இதேபோல் புதுவை எல்லைப்பகுதிகளில் ஒன்றான கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் வாகன திருட்டு, போதை பொருட்கள் நடமாட்டம், மதுபானங்கள் கடத்தலை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவையில் இருந்து சென்ற கார், மோட்டார் சைக்கிள்களை போலீசார் நிறுத்தி, அதற்கான ஆவணங்களை சரிபார்த்த பிறகே அனுமதித்தனர்.