மும்பை- புனே விரைவு சாலையில் கார்கள் மீது கியாஸ் டேங்கர் லாரி மோதி விபத்து- 3 பேர் பலி

மும்பை- புனே விரைவு சாலையில் கார்கள் மீது கியாஸ் டேங்கர் லாரி மோதிய விபத்தில், 3 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-05-09 13:33 GMT
மும்பை- புனே விரைவு சாலையில் விபத்து
மும்பை, 

  மும்பை- புனே விரைவு சாலையில் கார்கள் மீது கியாஸ் டேங்கர் லாரி மோதிய விபத்தில், 3 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.

கியாஸ் டேங்கர் லாரி

  மும்பை- புனே விரைவு சாலையில், காலை கியாஸ் டேங்கர் லாரி ஒன்று மும்பை நோக்கி வந்து கொண்டு இருந்தது. லாரி காலை 11.45 மணியளவில் போர் மலைப்பகுதியில் கொப்போலி எக்சிட் அருகில் வந்தது.  அப்போது ஒரு சரிவில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் லாரி தடுப்பு சுவரை தாண்டி அருகில் உள்ள விரைவு சாலைக்கு சென்றது. 

  அப்போது, லாரி அந்த வழியாக புனே நோக்கி சென்ற 2 கார்கள் மீது மோதியது. மேலும் சாலையில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் ஒரு காரில் இருந்த 3 பேர், மற்றொரு காரில் இருந்த ஒருவர் மற்றும் லாாி டிரைவர் படுகாயமடைந்தனர்.

3 பேர் பலி

  தகவல் அறிந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு நவிமும்பை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு காரில் இருந்த 3 பேர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். 3 பேரும் புனேயை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மற்றொரு கார் டிரைவர் மற்றும் லாரி டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  இதற்கிடையே, விபத்து காரணமாக மும்பை- புனே விரைவு சாலையின் இருபுறங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். 

போலீசார் 4 கிரேன்களின் உதவியுடன், சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு துறையினர் டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் டேங்கரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்படுவதை தடுக்க கவனமாக அதை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்