"தமிழர்களின் வரலாற்றை அறிய வெளி மாநிலங்களிலும், கடல் கடந்தும் அகழாய்வு" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழர்களின் வரலாற்றை அறிய வெளி மாநிலங்களிலும், கடல் கடந்தும் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2022-05-09 07:16 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழர்களின் வரலாற்றை அறிய தொல்லியல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்துகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்க் குடிமக்கள் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கினர் என்பது நமக்கு பெருமையளிக்கக்கூடிய செய்தியாகும்.

அயல்நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த தொடர்புகள் தொல்லியல் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன. மரபணு ஆய்வு, மண் பகுப்பாய்வு, கடல்சார் ஆய்வு போன்ற பல்துறை வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்ற திட்டம்.

புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர்களின் வரலாற்றை அறிய வெளி மாநிலங்களிலும், கடல் கடந்தும் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

கீழடி அகரம் அருகே சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில் நெற்பயிர்கள் பயிர் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை கிடைக்கப்பெறுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து, ஆய்வு செய்திடும் திட்டத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தாண்டு முதல் மேற்கொள்ளும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

மேலும் செய்திகள்