"ஜாதிக்கொரு சுடுகாடு இது தான் திராவிட மாடலா?" - மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேள்வி...!
தென்தாமரைக்குளத்தில் பாஜக சிறுபான்மைப்பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ராஜாவின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல். முருகன் கலந்து கொண்டார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தில் பாஜக சிறுபான்மைப்பிரிவு மாநில செயலாளர் சதீஷ் ராஜாவின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மத்திரியும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான எல்.முருகன் கலந்து கொண்டு நிர்வாகி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
சிலர் திராவிட மாடல் குறித்து பேசி வருகிறார்கள். திராவிடர்கள் என்றால் என்ன என அவர்கள் விளக்க வேண்டும். கிட்டத்தட்ட 50, 60 ஆண்டுகளாக திராவிட மாடலில் தான் ஆட்சி நடைபெறுகிறது.
இன்றும் கூட தமிழகத்தில் தனித்தனி சாதியினருக்கு தனித்தனியாக சுடுகாடுகள் உள்ளன. தமிழகத்தில் இன்றும் பல கோவில்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.
பல கிராமங்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. இது தான் திராவிட மாடலா, சாதிக்கொரு சுடுகாடு வைத்து கொள்வது தான் திராவிட மாடலா, 2014-க்கு பிறகு தான் தாய்மார்கள் வங்கிக்கணக்கு தொடங்கினார்கள்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருந்தார்கள். தற்போது அதுபோன்ற நிலையே கிடையாது. உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடிதான்.
மீன்வளத் துறையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பாரத பிரதமராக மோடி வந்த பிறகுதான் மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
வரலாற்றிலேயே முதல் முறையாக 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான மீனவர் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அதிக அளவு மீன்பிடி துறைமுகங்கள் செயல்பட்டு வருகிறது என்றால் அதற்கு மத்திய அரசு தான் காரணம். மீனவர்களுக்கு மானிய விலையில் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் வழங்கி வருகிறோம். இன்று உலக அளவில் மீன் ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600-க்கு மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தன. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கிச் சூடு கூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது மத்திய அரசு.
2014-க்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது.
உள்ளாட்சி வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டுவது தவறு. தமிழக அரசு பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றுள்ளது. அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழி போடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.