கர்நாடகத்தில் 2020-ம் ஆண்டில் 5.51 லட்சம் பேர் சாவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கடந்த 2020-ம் ஆண்டில் கர்நாடகத்தில் 5.51 லட்சம் பேர் இறந்த அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

Update: 2022-05-09 03:53 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை சிவில் பதிவு அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி சிவில் பதிவு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் 2020-ம் ஆண்டில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 808 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறியுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் மட்டும் 84,186 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இது 2019-ம் ஆண்டை காட்டிலும் 15.55 சதவீதம் அதிகம். 2019-ம் ஆண்டில் பல்வேறு காரணங்களால் 72,861 பேர் இறந்தனர். 2020-ம் ஆண்டு கொரோனா உயிரிழப்பின் காரணமாக பெங்களூருவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2020-ம் ஆண்டு பெங்களூருவில் மட்டும் கொரோனாவுக்கு 4,330 பேர் உயிரிழந்து உள்ளனர்.

2020-ம் ஆண்டில் கர்நாடகத்தில் உயிரிழந்தவர்களில் 0.5 சதவீதம் பேர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள். 1.97 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்டோர். 4.27 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். 7.62 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 39.9 சதவீதம் பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்.

2020-ம் ஆண்டு பெங்களூருவில் இறப்பு விகிதம் அதிகரித்த போதிலும், பிறப்பு விகிதமும் குறைந்தது. 2019-ம் ஆண்டு பெங்களூருவில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 181 குழந்தைகள் பிறந்தன. ஆனால் 2020-ல் 1 லட்சத்து 44 ஆயிரத்து 186 குழந்தைகள் தான் பிறந்து உள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்