சண்டே மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

அடிக்காசு உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-08 16:45 GMT
அடிக்காசு உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடிக்காசு உயர்வு
புதுச்சேரி காந்திவீதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சண்டே மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வீட்டு உபயோக பொருட்கள், ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். 
இங்குள்ள வியாபாரிகளிடம் நகராட்சி சார்பில் கடையின் பரப்பளவுக்கு ஏற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை அடிக்காசு வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அடிக்காசு ரூ.30 முதல் ரூ.50 வரை  உயர்த்தி வசூலிக்கப்பட்டது.
சாலைமறியல் 
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் காந்திவீதி- நேருவீதி சந்திப்பில் திடீரென்று அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு.சி. சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் துரை.செல்வம் தலைமை தாங்கினார். 
இதில் தலைவர் பாபு, செயலாளர் கார்த்திக், பொருளாளர் தயாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீசார், புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து   போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சண்டே மார்க்கெட் வியாபாரிகள், தற்போது கொரோனாவால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அடிக்காசு உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் வியாபாரிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்