வள்ளியூர் முருகன் கோவிலில் தேரோட்டம்...!
வள்ளியூர் முருகன் கோவிலில் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டத்திருவிழா 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விமர்சையாக நடைப்பெற்றது. பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ’என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம்,பல்வேறு வாகனங்களில் வீதியுலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா இன்று நடந்தது. இதனையொட்டி இன்று காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது .
பின்னர் முருகபெருமான் மற்றும் வள்ளி அம்பாள் தேரில் எழுந்தருளினார்கள். அதனை தொடர்ந்து காலை 10.10 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து ‘முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா ’என்ற கோஷத்துடன் தேரை இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இன்று இரவு சுவாமி மற்றும் அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்கள். நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.