திருச்சி அருகே லாரி-சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

திருச்சி அருகே லாரி-சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு.

Update: 2022-05-08 02:55 GMT
திருச்சி,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 10 பேர் நேற்று சரக்கு ஆட்டோவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர். அவர்களுடைய ஆட்டோ நேற்று இரவு திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது. 

இதில் ஆட்டோ சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்து வந்த 10 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த பகுதியினர் ஓடிச்சென்று காயத்துடன் கிடந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த லட்சுமி(58), சூர்யா(29) ஆகிய 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் டோல்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்