சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு பன்னாட்டு முனையங்களுக்கு மீண்டும் காமராஜர் அண்ணா பெயர்- டாக்டர் ராமதாஸ்

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரும் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-05-08 00:30 GMT
சென்னை விமான நிலையம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்ற போது 1989-90-ம் ஆண்டில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜரின் பெயரும் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டன. அதன் பின்னர் சென்னை விமான நிலையத்திற்கு இந்த பெயர்களே அடையாளமாக மாறியிருந்த நிலையில் விமான நிலைய நவீனமயமாக்கல் பணியின் போது ஏற்கனவே இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் அவற்றில் இருந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.

2013-ம் ஆண்டில் நவீனமயமாக்கப்பட்ட விமான நிலைய முனையங்கள் திறக்கப்பட்ட போது அவற்றுக்கு மீண்டும் இந்த பெயர்கள் சூட்டப்படவில்லை. அவை சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் பன்னாட்டு முனையம் என்றே அழைக்கப்பட்டன. உள்நாட்டு முனையத்தின் பழையக் கட்டிடத்தின் மீது காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகை இருந்தது. ஆனால் அதுவும் கடந்த 2020-ம் ஆண்டில் தகர்க்கப்பட்டு விட்டது.

அதன்பின்னர் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜரின் பெயரும் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் நீடிப்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை. சென்னை விமான நிலையத்தின் இணையதளத்தில் மட்டுமே உள்நாட்டு முனையத்திற்கு காமராஜரின் பெயரும் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் பெயர் சூட்ட வேண்டும்

விமான நிலையத்திலும் விமானங்களிலும் செய்யப்படும் அறிவிப்புகளில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் சென்னை பன்னாட்டு விமான நிலையம் என்றே பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. விமான பயணச்சீட்டுகளிலும் காமராஜர் அண்ணா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை. நீண்ட காலமாக தொடரும் இந்த அநீதியை சரி செய்ய வேண்டும் என்று பா.ம.க. உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் எந்த பயனும் ஏற்படவில்லை.

எனவே சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜரின் பெயரும் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும். விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராஜர் அண்ணா ஆகியோரின் பெயர் பொறித்த பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். விமான பயணச் சீட்டுகளிலும் காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர்கள்அச்சிடப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனே நடைமுறைக்கு வருவதை விமான நிலையங்கள் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்