ஓட்டல்கள், உணவு விடுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும்
புதுச்சேரியில் ஓட்டல்கள், உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு, அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் ஓட்டல்கள், உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு, அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு கடமை
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கொடுத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் இயங்கும் அனைத்து ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொடிகள் சேர்க்கப்படாமலும், பழைய கெட்டுப்போன உணவுகளை சூடுபடுத்தி விற்பனை செய்யப்படாமலும் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
கண்டனம்
கேரளாவில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி நகரை பொறுத்தவரையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் ஓட்டல்களிலும், சாலையோர கடைகளிலும் தயாரிக்கப்படும் உணவுகள், தரமானதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது சுகாதாரத்துறையின் செயலர் கீழ் இயங்கும் உணவுத் துறையின் கடமையாகும்.
பல ஓட்டல்கள், துரித உணவகங்களில் பர்கர், கிரில் சிக்கன், சவர்மா போன்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பல ஓட்டல்கள், துரித உணவகங்களில் சமைத்த உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டல்கள் உணவு விடுதிகளில் உள்ள சமையலறைகள், குடிநீர், அங்குள்ள குளிர்சாதன பெட்டிகள் ஆகியவற்றை கூட உணவு பாதுகாப்பு துறையின் மூலம் அரசு ஆய்வு செய்யாதது கண்டிக்கத்தக்கது.
உரிமம் ரத்து
புதுவை உணவுத்துறையில் 2 ஆய்வாளர்கள் மட்டும் உள்ளனர். உணவு பாதுகாப்பு துறையில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப செய்ய வேண்டும். புதுச்சேரியில் பணியில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் கீழ் இயங்கும் முக்கிய துறைகளில் குறைகளை சரிசெய்ய வேண்டியது அவர்களின் கடமையாகும். சுகாதாரமற்ற உணவு வினியோகம் என்பது மக்களின் உயிர் பிரச்சினை.
ஓட்டல் உரிமையாளர்களால் வினியோகப்படுத்தப்படும் உணவு தரமற்றது என்றால் அது விஷத்துக்கு சமமானது. மக்களின் உயிர் சம்பந்தமான பிரச்சினையில் முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரமற்ற முறையில் எந்த ஓட்டலில் உணவு தயாரிக்கப்பட்டாலும் அந்த ஓட்டல்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.