‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் மெரினா கடற்கரையில் மணற்சிற்பம் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், மெரினா கடற்கரையில் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆட்சி பொறுப்பில் முதல் ஆண்டை நிறைவு செய்த மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மணற்சிற்பம் பொதுமக்களின் பார்வைக்காக 3 நாட்கள் வைக்கப்பட உள்ளது.
வேளாண்மை மேம்பாடு, பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48, கொரோனா ஒழிப்பு, மத நல்லிணக்கணம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட திமுக அரசின் பல்வேறு திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கும் வகையில் இந்த மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
உதயசூரியன் வடிவத்தில், மையத்தில் முதல்-அமைச்சரின் முகம் உள்ளதைப் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணற்சிற்பத்தை, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார். அவருடன் சேர்ந்து 6 மணற்சிற்பக் கலைஞர்கள் இதனை உருவாக்கியுள்ளனர். இதற்கான பணிகள் இன்று காலை 5 மணிக்கு தொடங்கப்பட்டு, சுமார் 8 மணி நேரத்தில் முடிவடைந்தது.
இந்த மணற்சிற்பத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தார். மேலும் இதனை வடிவமைத்த மணற்சிற்பக் கலைஞர்களையும் அவர் பாராட்டினார்.