பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை; நகை குறைவாக இருந்ததால் வீட்டை கொளுத்திய பயங்கரம்

சிவகங்கை அருகே அடுத்தடுத்து ஆளில்லா வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Update: 2022-05-07 13:51 GMT
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் பகுதியில் வலசைக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் அழகர்சாமி (வயது 53). இவர் மலேசியாவில் பணி செய்து வருகின்றார். இவரது மனைவி பொன்னம்மாள் (48) மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இவர் மூன்று நாட்கள் முன்பு தனது மகன் விக்னேஸ்வரன் வீட்டிற்கு தேவகோட்டைக்கு சென்றுள்ளார். 

பின்னர் இவர் இன்று காலை 9 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் ரூமில் உள்ள பீரோவில் இருந்த 3-பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூபாய் 40- ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். 

மேலும் தங்கநகை குறைவாக இருந்ததால் ஆத்திரத்தில் பீரோவில் இருந்த துணிகள் செல்ப் -அலமாரியில் இருந்த துணிகள் மற்றும் ஜன்னல்களில் உள்ள ஸ்கிரீன் துணிகளையும் தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் கொடுத்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை வலைவீசி தேடி வருகிறார். 

கடந்த  3-ம் தேதி டிராவல்ஸ் நடத்தி வரும் சண்முகராஜா என்பவரது வீட்டில் 23- பவுன் மற்றும் 10-ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஒரே வாரத்தில் 2- திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதால் சாலைக்கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்