ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மனசாட்சியாக செயல்பட்டு வரும் கவர்னர் மனம் திருந்தி மன்னிப்பு கோர வேண்டும் - ஜவாஹிருல்லா

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான, கவர்னர் ரவியின் கருத்துக்கு, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-07 08:20 GMT
சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசுகையில், “பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ), மிகவும் ஆபத்தான இயக்கம். இவர்கள் மறுவாழ்வு மீட்பு மையம் போலவும், மாணவர்கள் அமைப்பைப் போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். 

மேலும் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக பி.எப்.ஐ செயல்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்தத்தில் நாட்டைச் சீர்குலைக்கவே இந்த அமைப்பு இயங்கி வருகின்றது" என பேசியிருந்தார்.

இந்நிலையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான, கவர்னர் ரவியின் கருத்துக்கு, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர்  வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல், அவரது பேச்சுகளும், செயல்பாடுகளும் கண்ணியமிக்க கவர்னர் பொறுப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்து வருகிறது. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மனசாட்சியாக செயல்பட்டு வரும் தமிழக கவர்னர் ரவி, தனது பேச்சுக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் மனம் திருந்தி, மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்