காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நண்பனை தூக்கி வந்து தேர்வு எழுத வைத்த சக மாணவர்கள்

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நண்பனை தூக்கி வந்து சக மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வைத்தனர்.

Update: 2022-05-06 19:57 GMT
தென்காசி,

தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது.

தென்காசி அருகே உள்ள வடகரையை சேர்ந்த மாணவன் சுப்பிரமணியன். இவர் குத்துக்கல்வலசையில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் நண்பர்களுடன் விளையாடியபோது கால் தவறி விழுந்து விட்டார். இதில், அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதற்காக சுப்பிரமணியன் மருத்துவ சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவர் பொதுத்தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற உத்வேகம், உறுதியுடன் இருந்தார்.

தூக்கி வந்த நண்பர்கள்

நேற்று சுப்பிரமணியன், காலில் கட்டுடன் தென்காசியில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு வந்தார். பள்ளி வாகனத்தில் அவர் அழைத்து வரப்பட்டார்.

தேர்வு மையத்தில் அவருக்கு மாடிப்பகுதியில் பரீட்சை அறை இருந்தது. அந்த மையத்திற்குள் வேறுயாரும் செல்லக்கூடாது என்பதால் அவரது நண்பர்களான சக மாணவர்கள் சுப்பிரமணியனை தூக்கிச் சென்று தேர்வு எழுத செய்தனர். சுப்பிரமணியனின் வலது கை ஒரு மாணவரின் தோளிலும், இடது கை மற்றொரு மாணவரின் தோளிலும் போட்டு தூக்கி வந்தனர். இதை பார்த்து மற்ற மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தேர்வு எழுதி முடிந்ததும் அதே சக மாணவர்கள் அவரை தூக்கி வெளியே கொண்டு வந்து பள்ளி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

எளிதாக இருந்தது

இதுபற்றி மாணவர் சுப்பிரமணியன் கூறும்போது, ‘காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததால் வலியுடன் தேர்வு எழுதினேன். பொதுத்தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் இருந்தேன். தேர்வு எளிதாக தான் இருந்தது. அதிக மதிப்பெண்கள் பெறுவேன்’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.

மேலும் செய்திகள்