பழனியில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு...!
பழனியில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்து அணிவகுப்பு நடத்தினர்.
பழனி,
மத்திய ரிசர்வ் போலீசின் ஒரு பிரிவான அதிவிரைவு படையினர் இன்று கோவையில் இருந்து பழனிக்கு வந்தனர். கமாண்டோ வெங்கடேஷ் தலைமையிலான இந்த படையினர் பழனியில் பதற்றமான பகுதிகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து டவுன் போலீசாருடன் இணைந்து அணிவகுப்பு நடத்தினர்.
அணிவகுப்பானது பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் தொடங்கி வேல் ரவுண்டானா, மார்க்கெட் ரோடு, பெரியகடைவீதி, கிழக்கு ரதவீதி, சுப்பிரமணியபுரம் ரோடு வழியே மீண்டும் போலீஸ்நிலையத்தை அடைந்தது. கமாண்டோ வெங்கடேஷ் தலைமையில் அணிவகுப்பில் பங்கேற்ற மத்திய அதிவிரைவு படையினர் கையில் துப்பாக்கி ஏந்தி சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
நாட்டில் சாதி, மத கலவரங்களின் போது மோதல்களை தடுப்பது, பாதுகாப்பு மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் இந்த படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் பதற்றமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்தின் வரைபடம், கலவரம் ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது, பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அறிக்கை தயார் செய்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர். அதன்படி இன்று பழனியில் மத்திய அதிவிரைவு படையின் ஆய்வு, அணிவகுப்பு நடந்தது என்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.