பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது: தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக பேட்டி

2020-ம் ஆண்டுக்கு பின்னர் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Update: 2022-05-05 19:00 GMT
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே பரவி வருகிறது.

பொதுத்தேர்வு தொடங்கியது

அந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு நோய்த்தொற்றுக்கு மத்தியில் நடந்து முடிந்தாலும், அதில் இறுதிநாள் தேர்வை மட்டும் கொரோனா காரணமாக சிலர் எழுத முடியாமல் போனதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கும் தனியாக தேர்வு நடத்தப்பட்டது.

அந்த கல்வியாண்டில் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படவில்லை. அதனைத்தொடர்ந்து நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கு நீடித்து வந்தது. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் இருந்து வந்ததால், கடந்த ஆண்டு (2021) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போனது.

அந்தவகையில் கடந்த கல்வியாண்டில் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, அவர்களுக்கான மதிப்பெண்ணும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டன.

8 லட்சம் பேர் எழுதினர்

இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. தமிழகத்தில் 3,081 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சுமார் 8 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

முதல்நாளான நேற்று தமிழ் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது. மாணவர்கள் எந்தவித பதற்றமும் இல்லாமல் பொறுமையாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில், வினாத்தாளை வாசிப்பதற்கும், விடைத்தாளில் சுயவிவரங்களை பதிவு செய்வதற்கும் நேரம் ஒதுக்கி, தேர்வு நடந்தது.

வெப்பநிலை பரிசோதனை

கொரோனா நோய்த்தொற்று பெருமளவில் குறைந்து இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

முககவசம் அணிவது கட்டாயம் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று கூறிய கல்வித்துறை, நோய் அறிகுறியுடன் இருப்பவர்கள் மட்டும் முககவசம் அணிந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டனர். மேலும், மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டு அனுமதித்தனர்.

அமைச்சர் பார்வையிட்டார்

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டார்.

அப்போது அங்கு தேர்வு எழுத தயாராக இருந்த மாணவ-மாணவிகளிடம் தைரியமாகவும், எந்தவித பதற்றமும் இல்லாமலும் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.

அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

45 ஆண்டுகளாக...

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம், ‘கொரோனா தொற்றுக்கு பிறகும், இந்த அரசு ஆரம்பித்த பிறகும் நடத்தப்படும் முதல் பொதுத்தேர்வு. மற்ற வாரியங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டன. அவர்களுடன் நாமும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற முறையில் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 45 ஆண்டுகளாக விடைத்தாள் மதிப்பிடும் பணி எப்படி நடந்ததோ? அதேபோல்தான் நடக்கும்.

தமிழகத்துக்கு வரும் இலங்கை தமிழர்களின் பிள்ளைகளை நம்முடைய பள்ளிகளில் சேர்ப்பது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை செய்வோம்' என்றார்.

எளிதாக இருந்தது

கொரோனா தொற்றால் பள்ளியில் நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதாலும், ஆன்லைன் வகுப்பு காலத்தில் அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்க முடியாது என்பதாலும் பாடத்திட்டங்களை குறைத்து அப்போது கல்வித்துறை அறிவித்தது. அதன் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். அதன்படியே நேற்று தமிழ் தேர்வு நடந்ததாக ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் தேர்வை பொறுத்தவரையில் எளிதாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

ஒரு மதிப்பெண் மற்றும் உரைநடை பகுதியில் 2 மதிப்பெண் வினாக்கள் மட்டும் புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டதாகவும், மீதம் உள்ள அனைத்து வினாக்களும் எதிர்பார்க்கப்பட்ட வினாக்களாகவே இருந்ததாகவும் அவர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்