அரிமளம் அருகே மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் வாலிபர் பலி 73 பேர் காயம்
அரிமளம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் வாலிபர் பலியானார். 73 பேர் காயமடைந்தனர்.
அரிமளம்:
மஞ்சுவிரட்டு
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கல்லூர் அரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செம்முனீஸ்வரர் திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அரிமளம், திருமயம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான காளைகள் களமிறக்கப்பட்டன.
முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை மாட்டின் உரிமையாளர்கள் அவிழ்த்துவிட்டனர். காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.
பார்வையாளர்கள் காயம்
இதனிடையே விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்காத வகையில் காளைகள், பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் விழா கமிட்டியினர், போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் வாகனத்தில் ஏற்றி வந்த காளைகளை அவிழ்க்க முடியாமல் போனதால் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை ஆங்காங்கே அவிழ்த்துவிட தொடங்கினர்.
கூட்டத்தை கண்டு மிரண்டு ஓடிய காளைகளை அப்பகுதி இளைஞர்கள் விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 74 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாலிபர் பலி
இதில் படுகாயமடைந்த 13 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஆலங்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் சிவபாரதி (20) மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சிவபாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.
மஞ்சுவிரட்டை புதுக்கோட்டை, அரிமளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.