திருபுவனை அருகே பயங்கரம் கழுத்தை இறுக்கி பெண் கொலை கணவர் வெறிச்செயல்
திருபுவனை அருகே கழுத்தை இறுக்கி பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருபுவனை
திருபுவனை அருகே கழுத்தை இறுக்கி பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை
திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் பழனி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 50). மதகடிப்பட்டில் உள்ள காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செந்தமிழ்செல்வி (44). இவர்களது மகன் யுவராஜ் (24). இவர் எம்.பி.பி.எஸ். டாக்டர் ஆவார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.
குடும்ப பிரச்சினை தொடர்பாக தாய், தந்தை இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த யுவராஜ் வளவனூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார்.
கழுத்தை இறுக்கி கொலை
சமீப காலமாக கலியமூர்த்தி சரியாக வீட்டுக்கு வருவதில்லையாம். மேலும் குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கலியமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், மனைவி செந்தமிழ்செல்விக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி, தனது தோளில் போட்டிருந்த துண்டை மனைவியின் கழுத்தில் போட்டு இறுக்கினார். இதில் மூச்சுத்திணறிய செந்தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனால் பயந்து போன கலியமூர்த்தி, அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன்பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கிருந்து செந்தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கலியமூர்த்தியை தேடி வந்தநிலையில் போலீசில் அவர் சிக்கி உள்ளதாக தெரிகிறது. கலியமூர்த்தியை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.